சென்னை
பரோலில் வந்து ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது
|கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பரோலில் வெளியே வந்து சிறைக்கு செல்லாமல் தப்பி சென்றவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 41). 2006-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த வீரா என்பவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சேலம் மத்திய சிறையில் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தார்.
2022-ம் ஆண்டு 5 நாட்கள் பரோலில் வெளியே வந்த ஹரிகிருஷ்ணன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் சிறைவாசல் வரை சென்று சிறை வார்டரை ஏமாற்றி அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் சிறை வார்டரான ராமகிருஷ்ணன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஹரி கிருஷ்ணனை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருப்பதாக வந்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் திருச்செந்தூர் சென்று கோவில் அருகே சுற்றி திரிந்த கொலை குற்றவாளி அரிகிருஷ்ணனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து தண்டையார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.