தஞ்சாவூர்
கைது
|தஞ்சையில் டிராக்டர் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை கரந்தை பூக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனம். இவருடைய மகன் முல்லைவேந்தன் (வயது28). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரை சம்பவத்தன்று இரவு பூக்குளம் மெயின்ரோட்டில் உள்ள காலிமனையில் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மர்மநபர் டிராக்டரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து முல்லைவேந்தன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் ஆகியோர் கோடியம்மன்கோவில் சோதனைசாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்தவரை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது டிராக்டரில் வந்தவர் கரந்தை ரெட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஆனந்த் (36) என்பதும், அவர் ஓட்டி வந்தது முல்லைவேந்தனுக்கு சொந்தமான டிராக்டர் என்பதும் டிராக்டரை திருடிச் சென்ற அவர், அரியலூரில் டிராக்டரை விற்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.