நாமக்கல்
'சவர்மா' சாப்பிட்ட மாணவி இறந்த விவகாரம்:ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைதுநாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு தயாரிக்க தற்காலிக தடை
|நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்டு மாணவி இறந்த விவகாரத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு தயாரிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நலம் விசாரிப்பு
நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் 'சவர்மா' சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி கலையரசி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய தாயார் உள்பட 4 பேர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதை தொடர்ந்து கலெக்டர் உமா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல்லில் ஐவின்ஸ் என்ற தனியார் துரித உணவக ஓட்டலில் கடந்த 16-ந் தேதி 'சவர்மா', பிஷ் பிங்கர்ஸ், பிரைடு ரைஸ், தந்தூரி உள்ளிட்ட துரித வகை உணவுகளை சாப்பிட்ட மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தோம். அங்கு பெரிய அளவில் காலாவதியான பொருட்கள் ஏதுமில்லை.
உணவு மாதிரிகள்
எனினும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கிருந்த உணவு பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு ஓட்டலுக்கு `சீல்' வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த உணவு மாதிரிகள் ஆய்வுக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு தயாரித்ததில் என்ன குறைபாடு? என்பது குறித்து பரிசோதனை முடிவில் தெரியவரும்.
அதே ஓட்டலில் இருந்து பார்சல் வாங்கி சென்று சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி கலையரசி இன்று (நேற்று) காலை இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அவருடைய தாயார் சுஜாதா, தம்பி பூபதி மற்றும் உறவினர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் குழு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
இதுவரை அந்த ஓட்டலில் சாப்பிட்ட 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணி உள்பட 43 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கியுள்ளோம்.
யாரேனும் வாந்தி, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் வந்தால், அவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நேற்று (நேற்று முன்தினம்) உடல் நலம் பாதித்ததும் பள்ளி மாணவி கலையரசி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை என தெரியவருகிறது. இதுதொடர்பாக இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி தரப்பில் தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 பேர் கைது
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:-
தரமற்ற உணவை மக்களுக்கு வழங்கிய ஓட்டல் உரிமையாளரான நாமக்கல் சிலுவம்பட்டியை சேர்ந்த நவீன்குமார், சமையலர்களான ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் மகபூர், தபஸ் குமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்காலிக தடை
நாமக்கல் மாவட்டத்தில் 'சவர்மா', கிரில் சிக்கன் போன்ற துரித வகை உணவுகளை தயாரிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்காணிக்க அந்தந்த பகுதியின் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மூலம் ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.