< Back
மாநில செய்திகள்
ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர்-இயக்குனருக்கு பிடிவாரண்டு
மதுரை
மாநில செய்திகள்

ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர்-இயக்குனருக்கு பிடிவாரண்டு

தினத்தந்தி
|
1 Sept 2023 2:28 AM IST

ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனருக்கு பிடிவாரண்டு பிறப்பித்ததுடன், 11-ந் தேதி இருவரையும் அழைத்து வந்து ஆஜர்படுத்த சென்னை போலீஸ் கமிஷனருக்கு அதிரடியாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.


ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனருக்கு பிடிவாரண்டு பிறப்பித்ததுடன், 11-ந் தேதி இருவரையும் அழைத்து வந்து ஆஜர்படுத்த சென்னை ேபாலீஸ் கமிஷனருக்கு அதிரடியாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

நேரில் ஆஜராக உத்தரவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சின்னத்தாய் என்பவர் கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மை பணியாளராக கடந்த 1988-ல் நியமனம் செய்யப்பட்டார்.

அவர் தனது பணியை வரன்முறை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களையும் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே சின்னத்தாய் இறந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் பரமன் தரப்பில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார், முதன்மைக்கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நேற்றைக்கு நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.

பிடிவாரண்டு

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மேலும், அவர்கள் 2 பேரும் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்ததுடன், அவர்கள் 2 பேரையும் 11-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்