< Back
மாநில செய்திகள்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிடிவாரண்டு: ஐகோர்ட்டில் நாமக்கல் கலெக்டர் ஆஜர்
மாநில செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிடிவாரண்டு: ஐகோர்ட்டில் நாமக்கல் கலெக்டர் ஆஜர்

தினத்தந்தி
|
17 Aug 2022 4:19 AM IST

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கலெக்டர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதையடுத்து அவர் மீதான வழக்கை முடித்துவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், 'எங்கள் ஊரில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகளை பலர் கட்டியுள்ளனர். இதுகுறித்து கடந்த 2008-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த ஆக்கிரமிப்புகளை மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை மண்டல என்ஜினீயர் அகற்றவில்லை. இதுகுறித்து அவர்களுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

ஆஜர்படுத்த வேண்டும்

இந்த வழக்கை கடந்த 3-ந்தேதி விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை 3 வாரங்களில் அகற்ற வேண்டும். இல்லையென்றால் கலெக்டர், என்ஜினீயர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டோம்.

ஆனால், ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை. அதிகாரிகளும் ஆஜராகவில்லை. எனவே, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், என்ஜினீயர் சந்திரசேகரன் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பிக்கிறோம். இவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்படுத்த வேண்டும்' என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

முடித்துவைப்பு

அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலெக்டரையும், என்ஜினீயரையும் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி ஆஜர்படுத்தினார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இந்த ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டன என்று கூறி மனு தாக்கல் செய்தார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்