அரியலூர்
தனியார் செல்போன் விற்பனை நிலைய கிளை மேலாளருக்கு பிடிவாரண்டு
|இழப்பீடு வழங்காததால் தனியார் செல்போன் விற்பனை நிலைய கிளை மேலாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செல்போன் பழுது
அரியலூர், மின் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவர் அரியலூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.20 ஆயிரம் செலுத்தி ஒரு செல்போனை வாங்கியுள்ளார். இந்த செல்போன் ஒரு மாத காலத்துக்குள் 2 முறை பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனம் தற்காலிகமாக அதனை சரி செய்து கொடுத்துள்ளது. மீண்டும் செல்போனில் பழுது ஏற்பட்டதால் அந்த செல்போனை பெற்றுக்கொண்டு புதிய செல்போனை வழங்குமாறு மோகன் கேட்டு உள்ளார்.
இதையடுத்து, அந்த செல்போனை பெற்றுக்கொண்ட விற்பனையாளர் அதனை சரி செய்து தரவும் இல்லை. புதிய செல்போனை வழங்கவும் இல்லை.
பிடிவாரண்டு
இதனால் பாதிக்கப்பட்ட மோகன், அரியலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த தனியார் நிறுவனம் மோகனுக்கு புதிய செல்போன் வழங்க வேண்டும் என்றும் இந்த நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக அவருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்டு மாதத்தில் தீர்ப்பளித்தது.
ஆனால் அந்த நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்காத காரணத்தால் கடந்த நவம்பர் மாதத்தில் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு தனியார் செல்போன் விற்பனை நிலைய கிளை மேலாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.