< Back
மாநில செய்திகள்
தனியார் காப்பீட்டு நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்டு எதிரொலி: பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைக்கு ரூ.2¾ லட்சத்திற்கான வரைவோலை
அரியலூர்
மாநில செய்திகள்

தனியார் காப்பீட்டு நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்டு எதிரொலி: பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைக்கு ரூ.2¾ லட்சத்திற்கான வரைவோலை

தினத்தந்தி
|
12 Feb 2023 12:23 AM IST

தனியார் காப்பீட்டு நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதையொட்டி ரூ.2¾ லட்சத்திற்கான வரைவோலையை அந்த நிறுவனம் வழங்கியது. இதனை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைக்கு வழங்கினார்.

அறுவை சிகிச்சை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பாரதி (வயது 43). இவரது கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020-ம் ஆண்டில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாரதி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பிடிவாரண்டு

கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை தமிழக அரசின் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்டு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டபடி பணத்தை வழங்காததால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த நவம்பர் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குனருக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த மாதம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

வரைவோலை

இதையடுத்து, இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான அலுவலர்கள் இழப்பீட்டு தொகை மற்றும் வட்டியுடன் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்துக்கான வரைவோலையை ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.

இதனைதொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் வழங்கிய வரைவோலையை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை பாரதிக்கு வழங்கினர். அப்போது ஆணையர் உறுப்பினர் பாலு மற்றும் நிறுவனத்தின் வக்கீல் காந்தி துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்