அய்யாக்கண்ணு கைது - செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்
|அய்யாக்கண்ணு கைது செய்ததை கண்டித்து உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி,
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இரட்டிப்பு லாபம் தரப்படும், விவசாயிகள் வாங்கி உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மத்திய - மாநில அரசுகளை கண்டித்து, சென்னை தலைமைச் செயலகம் முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில்,நேற்று இரவு திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் 9 பேரை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து உறையூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு கைது செய்ததை கண்டித்து உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை உறையூர் போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த விவசாயிகள் 3 பேர் அந்த பகுதியில் இருந்த வணிக வளாகத்தின் மேலிருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறிய விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் அய்யாக்கண்ணுவை விடுவித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவோம். இல்லையென்றால் கீழே குதித்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து உறையூர் போலீசார் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் செல்போன் கோபுரத்தில் ஏறிய விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறிது நேரம் கழித்து அய்யாக்கண்ணு நேரில் வரவழைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தனபால், தமிழ்செல்வன், ராமசந்திரன் ஆகிய 3 பேரும் பத்திரமாக கீழே இறங்கி வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் உறையூர் போலீசார் கைது செய்தனர்.