< Back
மாநில செய்திகள்
பள்ளி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் - கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்
மாநில செய்திகள்

"பள்ளி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும்" - கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்

தினத்தந்தி
|
20 July 2022 2:47 PM IST

கலவரம் நடந்த பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி. பகலவன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.

மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி. பகலவன், இன்று பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி வன்முறை, மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிறப்பு குழு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும் என்று குறிப்பிட்ட அவர், மாணவி உடலை பெறுவது தொடர்பாக பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

அதே சமயம், பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்