< Back
மாநில செய்திகள்
ஓசூரில் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம்; பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம்; பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
8 Jun 2023 7:00 PM GMT

ஓசூர்:

ஓசூரில் வெளிமாநில அழகிகளை வைத்து ஹைடெக் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விபசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், லேஅவுட் பகுதிகளில் சிலர் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் சென்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓசூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு இளம்பெண்கள் பலர் காரில் வந்து செல்வதாகவும், ஆண்கள் அடிக்கடி வந்து போவதாகவும் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அழகிகள் மீட்பு

இயைதடுத்து போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளம்பெண்களை போலீசார் மீட்டனர். அதேபோல் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா மரசூரை சேர்ந்த தனலட்சுமி (வயது 42), கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஸ்ரீஜித் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டு உரிமையாளர் மீது வழக்கு

இவர்களில் தனலட்சுமி பெங்களூரு எப்பகோடி பகுதியில் குடியிருந்து வருகிறார். ஸ்ரீஜித் ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் வசித்து வருகிறார். புரோக்கர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் அழகிகளை அழைத்து வருவதும், உல்லாசமாக இருக்க வரும் ஆண்களிடம் பணம் வசூலிப்பது, இளம்பெண்களை மீண்டும் கொண்டு சென்று விடுவது போன்ற வேலைகளைசெய்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராமன் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து ஓசூர் போலீசார் கூறியதாவது:- ஓசூரில் குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கு உரிய வகையில் இளம்பெண்கள் வந்தாலோ, ஆண்கள் வந்து சென்றாலோ அதுகுறித்து உடனடியாக போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்