< Back
மாநில செய்திகள்
குருபரப்பள்ளி அருகே முன்விரோதத்தில்வாகனங்களை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

குருபரப்பள்ளி அருகே முன்விரோதத்தில்வாகனங்களை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
24 April 2023 12:30 AM IST

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே முன்விரோதத்தில் லாரிகள், பொக்லைன் வாகனங்கள், காரை அடித்து நொறுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே நெருமருதி தே.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 42). பில்லனகுப்பம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (41). இந்த நிலையில் சிவசுப்பிரமணியம் தனது சகோதரர் சக்திவேல் என்பவருடன் சேர்ந்து எம்.சாண்ட் மணல் வியாபாரம் செய்து வருகிறார். இதற்கடையே திப்பிரெட்டிஅள்ளியை சேர்ந்த ஆண், பெண் ஆகியோர் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர். இந்த பிரச்சினையில் சக்திவேல் அந்த ஆணுக்கு ஆதரவாகவும், சசிக்குமார் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 20-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவசுப்பிரமணியம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள், ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களை 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. மேலும் அந்த கும்பல் சிவசுப்பிரமணியத்தின் கடைக்குள் புகுந்து நாற்காலிகள், மேஜைகளை உடைத்து சேதப்படுத்தியது..

இதுகுறித்து சிவசுப்பிரமணியம் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சசிக்குமார், வதனோடி (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்