தர்மபுரி
மாரண்டஅள்ளி அருகேஆடுகள் திருடிய 3 பேர் கைது
|மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே சின்னபாவளி காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 37). விவசாயி. இவர் தனது வீட்டின் முன்பு 4 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது 2 ஆடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் ஆடுகளை தேடி சென்றார்.
அப்போது நல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஆடுகளை திருடி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து மாரண்டஅள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் (25), ராமன் (19), பென்னாகரம் அருகே தாசம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் (37) என்பதும், ஆடுகளை திருடி சந்தையில் விற்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.