ஈரோடு
அந்தியூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது- 12 பவுன் நகை மீட்பு
|அந்தியூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது.
சந்தேகப்படும்படி 2 பேர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பாலம் பகுதியில் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் 2 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேல் ஆத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபு என்கிற சிவலிங்கம் (வயது 38), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எலந்த குட்டை காந்திநகர் பகுதியைச்சேர்ந்த சுரேஷ் என்கிற சுள்ளான் (34) என்பதும் தெரிய வந்தது.
நகை திருடியதாக கைது
மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் அந்தியூரில் பெரியார் நகர், பர்கூர் ரோடு, முனியப்பன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 பவுன் மதிப்புடைய 2 தங்க சங்கிலி மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேரும் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 2 பேரும் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் 15 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.