ஈரோடு
டி.என்.பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது- மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
|டி.என்.பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கட்டுமான பணி
டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஓடையில் பொதுப்பணித்துறை சார்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் பாலம் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியில் 35 பேர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இதில் 24 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.
கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 26), மணிகண்டன் (27) ஆகியோரும் இந்த கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் வேலைக்கு வந்ததால் கட்டுமான நிறுவன நிர்வாகிகள் இருவரையும் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.
தாக்குதல்
இந்த நிலையில் கட்டுமான ேவலைக்காக வந்திருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிப்லாப், அனிபா சிங்கா ஆகியோர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீகாந்த், மணிகண்டன் இருவரும் பிப்லாப்பையும், அனிபாசிங்கையும் தடுத்து உள்ளூரை சேர்ந்த நாங்களே வேலை செய்யாதபோது, வெளிமாநிலத்தில் இருந்து நீங்கள் எப்படி இங்கு வேலைக்கு வரலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பிப்லாப்பும், அனிபா சிங்காவும் கூச்சல் போடவே, சத்தம் கேட்டு கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் முனுசாமி, காவலாளி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட சிலர் ஓடி வந்து தடுத்தனர்.
2 பேர் கைது
அப்போது மாரியப்பனின் கைவிரலை பிடித்து ஸ்ரீகாந்த் கடித்ததாகவும் மேலும் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவரை வரவழைத்து பிப்லாப், அனிபா சிங்கா, முனுசாமியை தாக்கியதாகவும் தெரிகிறது. அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் ஸ்ரீகாந்த், மணிகண்டன், பிரதாப் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து காயம் அடைந்த பிப்லாப், அனிபா சிங்கா, மாரியப்பன், முனுசாமி ஆகியோர் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்த், மணிகண்டன் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரதாப்பை வலைவீசி தேடி வருகிறார்கள்.