ஈரோடு
ஈரோட்டில் வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன், பணம் பறிப்பு- 4 பேர் கைது
|ஈரோட்டில் வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன், பணத்தை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன், பணத்தை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டர்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீர்த்தராஜின் மகன் சைலேந்தர் (வயது 28) என்பவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் ஈரோடு சத்திரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அப்போது 4 பேர் அங்கு வந்தார்கள்.
அவர்கள் சைலேந்தரிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் சைலேந்தரின் காதில் மோட்டார் சைக்கிளின் சாவியால் குத்தியும், காலில் கல்லை தூக்கி போட்டும் தாக்கினார்கள். அதன்பிறகு அவரிடம் இருந்து ஒரு செல்போன், 2 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.620-ஐ பறித்து கொண்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதில் காயம் அடைந்த சைலேந்தர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
4 பேர் கைது
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சைலேந்தரை தாக்கியது, ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த சண்முகத்தின் மகன் மதன்குமார் (வயது 26), காரைவாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த சந்துருவின் மகன் சபரி (28), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (31), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் ராஜ்குமார் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.