கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி அருகேஇருதரப்பினர் மோதலில் 11 பேர் கைது
|குருபரப்பள்ளி:
சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துர்க்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 24). இவர் கடந்த 5-ந் தேதி எண்ணேகொள் புதூர் ஆற்றங்கரையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது குருபரப்பள்ளி அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்த வாசு (20), பர்கூர் அச்சமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் புகழ் (19) மற்றும் சிலர் அங்கு வந்தனர். அப்போது வாசுவுக்கும், பிரேம்குமார் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் பிரேம்குமாரை, வாசு, புகழ் மற்றும் சிலர் தாக்கினர். இதில் காயம் அடைந்த பிரேம்குமார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பிரேம்குமார் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வாசு, புகழ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதே போல மாணவர் புகழ் தான் தாக்கப்பட்டதாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் பி.ஜி.துர்க்கம் சின்னராஜ் (24) பிரேம்குமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் பிரேம்குமாரின் நண்பர்கள் சிலர் வாசுவின் வீட்டிற்கு வந்து அவரது தாய் அஞ்சலாவை மிரட்டி சென்றனர். இது குறித்து அஞ்சலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிரசாந்த் (23), வாசுதேவன் (21), சோமு (26), சாரதி (25), வினித் (23), சின்னராஜ் (24), சக்திவேல் (26) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.