< Back
மாநில செய்திகள்
காதல் விவகாரத்தில்கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தர்மபுரி
மாநில செய்திகள்

காதல் விவகாரத்தில்கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 Feb 2023 12:30 AM IST

தர்மபுரியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு

தர்மபுரி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கும், விக்னேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி விக்னேஷிடம் செல்போனில் பேச மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மற்றும் அவருடைய தாயாரிடம் விக்னேஷ் சென்று பேசினார். அப்போது இனிமேல் தனது மகளிடம் பேச வேண்டாம் என்று அவருடைய தாயார் கூறியுள்ளார்.

கைது

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், மாணவி மற்றும் அவருடைய தாயாரை தரக்குறைவாக திட்டினாராம். மேலும் மாணவியின் கன்னத்தில் தாக்கி அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மாணவியின் தலையில் போட முயன்றதாக தெரிகிறது. தொடர்ந்து தாய், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷை தடுத்து நிறுத்தினர். காயமடைந்த மாணவியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்