< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

சத்தி அருகே புலித்தோல் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பெண்கள் கைது

தினத்தந்தி
|
25 Feb 2023 3:42 AM IST

சத்தியமங்கலம் அருகே புலித்தோல் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பெண்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே புலித்தோல் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பெண்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூரில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் கூடாரம் போட்டு தங்கியிருப்பதாகவும், அவர்களிடம் வன விலங்குகளின் தோல், எலும்புகள் இருப்பதாகவும் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 2 பைகளில் பதுக்கி வைக்கப்பட்ட புலித்தோல், புலி நகம் மற்றும் எலும்புகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அங்கு தங்கியிருந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம் சங்கர் (வயது50), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரத்தனா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59) ஆகியோர் என்பதும், அவர்கள் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் புலியை வேட்டையாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சத்தியமங்கலம் வனத்துறையினர் நீலகிரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் பவாரியா என்று அழைக்கப்படும் வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், கம்பளி விற்பனை செய்வது போல் இங்கு வந்து புலி வேட்டையாடியவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் 2 பெண்கள்

இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சத்தியமங்கலம் வனத்துறையினர் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் குடும்பத்ைத சேர்ந்த 2 பெண்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பெயர் சுனிதா, விமலா என்பதும், அவர்களும் புலி வேட்டையில் தொடர்பு உள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சுனிதாவும், விமலாவும் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்