< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் பரபரப்பு; போதை மாத்திரைகளை பவுடராக்கி ஊசி மூலம் ஏற்றி விற்ற 11 வாலிபர்கள் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் பரபரப்பு; போதை மாத்திரைகளை பவுடராக்கி ஊசி மூலம் ஏற்றி விற்ற 11 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
24 Dec 2022 4:08 AM IST

ஈரோட்டில் போதை மாத்திரைகளை பவுடராக்கி ஊசி மூலம் ஏற்றி விற்பனை செய்த 11 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.


ஈரோட்டில் போதை மாத்திரைகளை பவுடராக்கி ஊசி மூலம் ஏற்றி விற்பனை செய்த 11 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

போதை ஊசி விற்பனை

ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியவலசு, பெரியசேமூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கும்பல் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இந்த கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 21) என்பவர் நேற்று முன்தினம் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது அக்காளிடம் இருந்து தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறிக்க முயன்றதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் அந்த கும்பலை சேர்ந்த கருங்கல்பாளையம் காவிரி ரோடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (20) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

வலி நிவாரண மாத்திரை

விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

ரஞ்சித்குமார், தமிழ்செல்வன் உள்பட 11 பேர் கொண்ட கும்பல் ஆஸ்துமா, கேன்சர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்து ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர்.

பணம் பிரிப்பதில் தகராறு

வலி நிவாரண மாத்திரைகள் பெரும்பாலும் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால் இந்த கும்பல் கரூரில் இருந்து கூரியர் மூலம் 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ரூ.320-க்கு வாங்கி உள்ளனர். பின்னர் அந்த மாத்திரைகளை பவுடராக மாற்றி அதனுடன் தூக்க மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்தை கலந்து அதை ஊசி மூலம் ஏற்றி விற்பனை செய்துள்ளனர். போதை ஊசிகளை விற்பனை செய்த பணத்தை பிரிப்பதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமார் தனது அக்காளின் தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்தாக போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததும், பின்னர் விசாரணையில் அனைவரும் மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது.

11 பேர் கைது

இதைத்தொடர்ந்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்குமார், தமிழ்செல்வன் மற்றும் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த சரவணன் (21), சஞ்சீவ்குமார் (25), ஷாருக்கான் (22), ஜெகநாதன் (22), ஆரிப் (23), சக்திவேல் (23), கதிரவன் (23), பசுபதி (22), அப்துல் ஷெரீப் (21) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 40 மாத்திரைகள், ரூ.28 ஆயிரம், இருசக்கர வாகனம் ஒன்று, 10 ஊசிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சீவ்குமார் என்பவர் மீது ஏற்கனவே போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஈரோட்டில் போதை ஊசி விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்