< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

ரூ.29 லட்சம் கொடுத்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கில் மேலும் 5 பேர் கைது- 2 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
22 Dec 2022 3:36 AM IST

பெருந்துறை அருகே ரூ.29 லட்சம் கொடுத்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெருந்துறை

பெருந்துறை அருகே ரூ.29 லட்சம் கொடுத்து கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பறிமுதல்

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அன்சார் என்பவர் தனது நண்பர்களுடன் ஜவுளி வாங்குவதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட், ஏரி கருப்பன் கோவில் அருகே காரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது போலீஸ் சீருடையில் மற்றொரு காரில் வந்த 4 பேர் அன்சாரியிடம், நீங்கள் வைத்திருப்பது கருப்பு பணம் என்று கூறியதுடன் ரூ.29 லட்சத்தை பறித்து சென்றனர்.

கள்ள நோட்டு

இதுகுறித்து அன்சார் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த பிரேமா என்கிற மகாலட்சுமி (வயது 48), கோவை மாவட்டம் ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த ஜனார்த்தனம் (47), கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புரையார் தேசத்தை சேர்ந்த பஷீர் (49), பாலக்காடு மாவட்டம் மேலர்கோடு சிட்டலிம்சேரியை சேர்ந்த ஜலில் (40), பாலக்காடு அருகே உள்ள கண்ணடி பகுதியை சேர்ந்த சுதிர் (47) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில், அன்சார், அபிலாஷ், பஷீர் ஆகியோருடன், இந்த 5 பேரும் சேர்ந்து கூட்டாக இரிடியம், தங்க பிஸ்கட் ஆகியவற்றை கடத்துவது, பணம் இரட்டிப்பு செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது,' தெரியவந்தது. மேலும் 'அன்சாரிடம் இருந்து ரூ.29 லட்சத்தை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக ரூ.6 கோடி கள்ள நோட்டுகளை கொடுக்காமல், அந்த 5 பேரும் ரூ.29 லட்சத்தை பறித்து சென்றதையும்,' போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டதுடன், அன்சாருடன் வந்த பஷீரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் 5 பேர் கைது

அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில், 'இந்த வழக்கில் தொடர்புடையதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பத்மநாபன் (53), பால்ராஜ் (55), கோவேந்திரன் (35), சகாய ஆரோக்கியதாஸ் (42), சுப்பிரமணி (62),' ஆகிய 5 பேரை பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். ஆஜா்படுத்தப்பட்ட 5 பேரையும், 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய அன்சார், அபிலாஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டால்தான் முழுமையாக தகவல் கிடைப்பதுடன், இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா? என்பதும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்