< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் ரெயிலில் சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை -பணம் திருட்டு; 2 கொள்ளையர்கள் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் ரெயிலில் சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை -பணம் திருட்டு; 2 கொள்ளையர்கள் கைது

தினத்தந்தி
|
21 Dec 2022 2:22 AM IST

ஈரோட்டில் ரெயிலில் சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.


ஈரோட்டில் ரெயிலில் சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

7 பவுன் நகை

சென்னை கொட்டிவாக்கம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் மனோஜ் ஜாகப் ஜான் (வயது 51). தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த 17-ந் தேதி தனது தாய் மரியம்மா ஜானுடன் (70) சென்னையில் இருந்து கேரள மாநிலம் திருவல்லாவுக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அவர்கள் 2 பேரும் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தனர். அந்த ரெயில் நள்ளிரவில் ஈரோட்டுக்கு வந்து நின்றது.

அப்போது 2 பேர் குளிர்சாதன பெட்டியில் ஏறினார்கள். அங்கு பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் 2 பேரும் மரியம்மா ஜானுக்கு அருகில் இருந்த கைப்பையை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

அதன்பிறகு ரெயில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்த மரியம்மா ஜான், தன்னிடம் இருந்த கைப்பை மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது திருட்டு போனது தெரியவந்தது. அந்த பையில் 2 தங்க சங்கிலிகள், 2 தங்க வளையல்கள் என 7 பவுன் நகையும், ஒரு செல்போனும், ரூ.5 ஆயிரமும், 2 ஏ.டி.எம். கார்டுகள், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களையும் வைத்திருந்தார்.

தனிப்படை

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசில் மனோஜ் ஜாகப் ஜான் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நபர்களை பிடிக்க ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுவரன், மனோகரன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்த், போலீஸ் ஏட்டு கண்ணன், போலீஸ்காரர் ஜெயவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

சந்தேகப்படும்படி..

இந்தநிலையில் ஈரோடு ரெயில் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் நேற்று 2 பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். உடனே 2 பேரையும் பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த மூர்த்தியின் மகன் ராஜா (29), கரூர் மாவட்டம் குளித்தலை நாகபாளையத்தை சேர்ந்த சுந்தரின் மகன் கணேஷ்குமார் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், ரெயிலில் மரியம்மா ஜானிடம் இருந்து கைப்பையை திருடியதை ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து ராஜா, கணேஷ்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை, செல்போனை மீட்டனர்.

கைதான ராஜா, கணேஷ்குமார் ஆகியோர் மீது கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் இருப்பதும், திருச்சி சிறையில் இருந்தபோது அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகியபிறகு ஒன்றாக சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்