ஈரோடு
மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமறைவாக இருந்த அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கைது- பெருந்துறையில் பரபரப்பு
|பெருந்துறையில் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை
பெருந்துறையில் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
தொடக்கப்பள்ளி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கீதாராணி (வயது 53). இவர் பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அவரை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது டாக்டரிடம் மாணவன் பள்ளியில் தலைமை ஆசிரியை கீதாராணி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய சொன்னதாகவும், அப்போது மாணவர்களுடன் சேர்ந்து தானும் சுத்தம் செய்தபோது கொசு கடித்ததாகவும் கூறினான்.
பணி இடைநீக்கம்
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் புகார் மனு அளித்தார்கள். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிசந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் பாலக்கரை தொடக்க பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் தலைமை ஆசிரியை கீதாராணி மாணவர்களை கழிப்பறையை பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கீதாராணியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே மாணவனின் தாய், பெருந்துறை போலீசில் கீதாராணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
கைது
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாராணியிடம் விசாரணை நடத்த சென்றார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து கீதாராணியை போலீசார் தேடி வந்தார்கள். இ்ந்தநிலையில் கீதாராணி பெருந்துறை ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று கீதாராணியை கைது செய்தார்கள். பின்னர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கீதாராணி கோவையில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.