< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் நிலத்தை அடமானம் வைத்த விவசாயியிடம் ரூ.2 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன அதிபர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் நிலத்தை அடமானம் வைத்த விவசாயியிடம் ரூ.2 கோடி கந்துவட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன அதிபர் கைது

தினத்தந்தி
|
28 Sept 2022 2:04 AM IST

ஈரோட்டில் நிலத்தை அடமானம் வைத்த விவசாயியிடம் ரூ.2 கோடி கந்து வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் நிலத்தை அடமானம் வைத்த விவசாயியிடம் ரூ.2 கோடி கந்து வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2 கோடி

திருப்பூா் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 82). விவசாயி.

இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் துய்யம்பூந்துறையை சேர்ந்த பழனிசாமி (59) என்பவரிடம் ரூ.18 லட்சம் கடன் பெற்றார். அவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த கடன் பெறுவதற்காக விவசாயி பழனிசாமி தனது நிலத்தை அடமானம் வைத்தார்.

இந்த நிலையில் அடமானம் வைத்த நிலத்தை நிதி நிறுவன அதிபர் பழனிசாமி தனது பெயருக்கு மாற்றி கிரையம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே தனது நிலத்தை திருப்பி தரும்படி விவசாயி பழனிசாமி கேட்டு உள்ளார். அதற்கு அவர் வட்டியுடன் சேர்த்து ரூ.2 கோடி கொடுத்தால், நிலத்தை கொடுப்பதாக கூறிஉள்ளார்.

கந்துவட்டி

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி பழனிசாமி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் எனது நிலத்தை அடமானம் வைத்து கடந்த 2013-ம் ஆண்டு ரூ.18 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். அடமானம் வைத்த நிலத்தை துய்யம்பூந்துறையை சேர்ந்த பழனிசாமி தனது பெயருக்கே ஒரு ஆண்டிலேயே கிரையம் செய்து உள்ளார். நான் வட்டியை மட்டும் செலுத்தி வந்து உள்ளேன். அவர் எனது நிலத்தை கிரையம் செய்த விவரம் எனக்கு தெரிய வந்தது.

இதுதொடர்பாக அவரிடம் சென்று கேட்டதற்கு, எனக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடி தர வேண்டும் என்று கூறினார்.

எனவே கந்துவட்டி கேட்டு மிரட்டும் அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கைது

இதையடுத்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், விவசாயி பழனிசாமியிடம் இருந்து அடமானமாக பெற்ற நிலத்தை துய்யம்பூந்துறையை சேர்ந்த பழனிசாமி தனது பெயரிலேயே கிரையம் செய்து கொண்டதும், அந்த நிலத்தை திருப்பி கொடுக்க அவர் அதிக பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனிசாமியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைது செய்த பழனிசாமி ஈரோடு 2-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்