< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

அந்தியூர் பகுதியில் யானை தந்தம் கடத்திய 7 பேர் கைது- 4 தந்தங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
16 Sept 2022 2:51 AM IST

அந்தியூர் பகுதியில் யானை தந்தம் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தியூர்

அந்தியூர் பகுதியில் யானை தந்தம் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் யானை தந்தங்களை வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

யானை தந்தங்கள் வைத்திருந்ததாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 அடி நீளமுள்ள 4 யானைத்தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் 6 பேர்...

விசாரணையில் யானை தந்தங்களை மேலும் 6 பேர் கடத்தி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் அந்தியூர் புதுக்காடு பகுதியை சேர்ந்த வரதராஜ் (வயது 47), சந்தியபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (40), பழையபாளையம் கரும்பாறை பகுதியைச் சேர்ந்த பிரபு குமார் (32), வாணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி (30), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (33), கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் சந்தியபாளையம் பகுதியில் உள்ள நீரோடை அருகே 3 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்ட 2½ அடி நீளமுள்ள 3 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 யானை தந்தங்களையும் அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

அவர்களுக்கு யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது? தந்தங்களை எங்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வைத்து இருந்தனர் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பர்கூரில்...

இதேபோல் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி பெரியூர் மலை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் யானை தந்தம் கடத்தி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு மாவட்ட சிறப்பு தனி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ஏட்டு தேவராஜ் அடங்கிய தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது வீட்டு உரிமையாளர் நாகன் (35) அங்குள்ள ஒரு பெட்டியில் வைத்து இருந்த 2 அடி நீளமுள்ள ஒரு யானை தந்தத்தை எடுத்து போலீசாரிடம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். யானை தந்தத்துடன் பர்கூர் வனச்சரகர் பிரகாசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்