< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது

தினத்தந்தி
|
10 Sept 2022 2:02 AM IST

ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஈரோடு

ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

போலி மதுபானம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலி மதுபானம் விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்த அண்ணாச்சி என்கிற வீரபாண்டியன் (வயது 51) என்பவரை போலீசார் தேடி வந்தார்கள்.

கும்பகோணத்தில் தலைமறைவான அவருடைய செல்போன் எண்ணின் மூலம் போலீசார் பின்தொடர்ந்தனர். அப்போது அவர் ஈரோட்டில் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீசுக்கு தஞ்சை மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைந்த போலீஸ் குழு நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் ஆலை

செல்போன் சிக்னல் அடிப்படையில் ஈரோடு சூளை பகுதியில் வீரபாண்டியன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தை நோட்டமிட்டனர். அப்போது அங்கு ஒரு குடோனை ஒட்டி மதுபாட்டில்கள் குவித்து போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அங்கே ஆள் நடமாட்டம் இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் குடோனை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்தவர்கள் எதிர்பாராத வகையில் போலீசார் குடோனுக்குள் நுழைந்தனர். அங்கே இருந்த 4 பேரை பிடித்தனர்.

பின்னர் குடோனுக்குள் பார்வையிட்டபோது, அங்கு ஒரு சிறிய அளவிலான போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்தது போலீசாருக்கு அதிர்ச்சி அளித்தது.

பழைய பாட்டில் வியாபாரம்

இதுபற்றி போலீசார் விசாரித்தபோது தெரியவந்த விவரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து உள்ள முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த சாத்தூர் என்பவருடைய மகன் மாலைராஜ் (34), பேரையூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகன் அசோக்குமார் (33), கமுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் சித்திரவேல் (27) மற்றும் போலீசாரால் தேடப்பட்ட வீரபாண்டியன் என்கிற அண்ணாச்சி ஆகிய 4 பேரும் சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு வந்துள்ளனர். இங்கு பழைய பாட்டில்கள் சேகரித்து வியாபாரம் செய்வது போன்று வேலை செய்தனர். பின்னர் பாட்டில்கள் போட்டு வைக்க சூளை பகுதியில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.

அங்கு பாதுகாப்பாக இடத்தை அமைத்துக்கொண்டு கடந்த ஒரு மாதமாக போலி மதுபானம் தயாரித்து இருக்கிறார்கள். ஸ்பிரிட் வாங்கி வந்து அதில் கலர் (சாயம்) கலந்து பழைய மதுபாட்டில்களில் அடைத்து, இங்கிருந்து கும்பகோணம் கொண்டு சென்று விற்பனை செய்து இருக்கிறார்கள். ஸ்பிரிட்டை கையிலேயே கலந்து பாட்டில்களில் அடைத்து, பாட்டிலில் மூடி போடுவதற்கு மட்டும் 2 சிறிய அளவிலான கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

4 பேர் கைது

தினசரி 50-க்கும் குறைவான பாட்டில் போலி மதுவை தயாரித்து விற்பனை செய்து உள்ளனர். இதற்கிடையே கும்பகோணத்தில் மாட்டிக்கொண்டதால், தற்போது போலீசாரின் கழுகுப்பார்வைக்கு தப்ப முடியாமல் 4 பேரும் போலீசில் சிக்கியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மாலைராஜ், அசோக்குமார், சித்திரவேல், வீரபாண்டியன் என்கிற அண்ணாச்சி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். குடோனில் இருந்து 2 கருவிகள், ஒரு லிட்டர் ஸ்பிரிட், பாட்டிலில் அடைக்கப்பட்ட சுமார் 50 பாட்டில் போலி மது ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

இதுகுறித்து ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டு உள்ள 4 பேரும் வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனரா? போலி மதுபான தயாரிப்பில் வேறு நபர்கள் தொடர்பில் உள்ளனரா? போலி மதுபான விற்பனையாளர்களாக செயல்பட்டவர்கள் யார்? என்ற விவரங்களை ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா ஆகியோர் தலைமையிலான போலீஸ் குழுவினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்