ஈரோடு
அந்தியூர் அருகே பரபரப்பு சம்பவம்; விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற 4 பேர் கைது- தப்பிஓடியபோது போலீசில் சிக்கினர்
|அந்தியூர் அருகே விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். தப்பி ஓடியபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். தப்பி ஓடியபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விவசாயி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் அத்தப்பன் (வயது 60). விவசாயி. இவர் பெரியேரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். அத்தப்பன் 4 மாடுகளும் வளர்த்து வருவதால் காவலுக்காக தோட்டத்து வீட்டிலேயே படுத்துகொள்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் அங்கு வந்தார்.
திடீரென அந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் அத்தப்பனை கண்ணையும், கால்களையும் கட்டி அருகே இருந்த ஏரி பகுதிக்கு கொண்டு சென்று போட்டார்கள். இதனால் நிலை குலைந்துபோன அத்தப்பன் சிறிது நேரத்தில் கட்டை அவிழ்த்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு ஓடி வந்தார்.
தாக்கினார்கள்...
அப்போது ேதாட்டத்து வீட்டில் மர்ம நபர்கள் 4 பேர் மாடுகளை கடத்தி செல்வதற்காக கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அத்தப்பன் திருடன் திருடன் என்று கத்தியபடியே அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் 4 பேரும் சேர்ந்து அரிவாள் மற்றும் கைகளால் தாக்கினார்கள். இதனால் அவர் மயங்கி விழுந்தார்.
அதே நேரம் மாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கத்தின. அதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். உடனே மர்ம நபர்கள் தாங்கள் வந்த சரக்கு ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
சுற்றிவளைப்பு
அதேநேரம் அந்த வழியாக ரோந்து வந்த அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, ஏட்டு மாதேஷ் மற்றும் போலீசார் எதிரே ஓடிவந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தார்கள்.
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட 4 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் கலபம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (25), மதில்மேல்குடியை சேர்ந்த இக்பால் (34) தேவகோட்டையை சேர்ந்த அடைக்கலம் (38), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் மகேந்திரன் என்பதும் தெரிய வந்தது.
4 பேர் கைது
4 பேரும் சேர்ந்து அத்தப்பனுடைய தோட்டத்தில் உள்ள 4 மாடுகளை திருடி சரக்கு ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றுள்ளார்கள். அப்போது பொதுமக்கள் ஓடிவந்ததால் 4 பேரும் தப்பி ஓடும்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் 4 பேரையும் கைது செய்து பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தார்கள். மாட்டை கடத்தி செல்ல கொண்டு வந்த சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருடர் தாக்கியதில் படுகாயம் அடைந்த அத்தப்பன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல்உதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.