கிருஷ்ணகிரி
ஓசூர் பகுதியில்பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது
|ஓசூர்:
ஓசூர் பகுதியில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை திருடிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனிப்படை அமைப்பு
ஓசூர் அட்கோ போலீஸ் நிலையம் மற்றும் பேரிகை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மர்மநபர்கள் இரவில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து பணம், நகை திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மேற்பார்வையில் அட்கோ மற்றும் பேரிகை போலீசார் குழுவுடன் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடிவந்தனர். அவர்களை ஓசூர் மட்டுமின்றி கர்நாடகாவிலும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மடிவாளா பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் கோடிஅள்ளியை சேர்ந்த ஜெகன்நாதா (32) மற்றும் சிக்கபள்ளாபூர் மாவட்டம் கொத்தப்பள்ளியை சேர்ந்த உமாசங்கர் (35) என்பது தெரியவந்தது.
கைது
இவர்கள் 2 பேரும் ஓசூர், பேரிகை பகுதிகளில் இரவில் பூட்டிகிடக்கும் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஓசூர், பேரிகை மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.