< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அருகேவழித்தட தகராறில் விவசாயியை குத்திக்கொன்றேன்கைதான முதியவர் வாக்குமூலம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அருகே'வழித்தட தகராறில் விவசாயியை குத்திக்கொன்றேன்'கைதான முதியவர் வாக்குமூலம்

தினத்தந்தி
|
30 July 2023 7:00 PM GMT

தர்மபுரி அருகே வழித்தட தகராறில் விவசாயியை குத்திக்கொன்றதாக கைது செய்யப்பட்ட முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவசாயி கொலை

தர்மபுரி அருகே பெரியகுரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூஞ்சோலை (வயது 60), விவசாயி. இவருடைய உறவினர் விஸ்வநாதன் (63). இவர்கள் இருவருக்கும் வீட்டையொட்டி உள்ள நிலத்திற்கு செல்லும் வழித்தட பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் குறிப்பிட்ட வழித்தட பாதையில் பூஞ்சோலை நடந்து சென்றபோது அங்கு வந்த விஸ்வநாதன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த பூஞ்சோலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து மதிகோன் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். மேலும் தப்பி ஓடிய விஸ்வநாதனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த நிலையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நிலத்தில் வழித்தடம் அமைப்பது தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக எனக்கும், பூஞ்சோலைக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து பூஞ்சோலையை தீர்த்து கட்ட முடிவு செய்த நான் கத்தியால் குத்திக்கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து விஸ்வநாதனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்