முதல் நாளில் புதிய புத்தகம் வழங்கல்; குதுகலத்தில் மாணவர்கள்
|தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 2022-23-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் அவர்களுக்கு ஆரம்பாகிறது.
கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஆனால் இது திட்டமிடலுக்கான நேரம்தான் என்றும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் அமைவிடம், வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை தலைமையாசிரியர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர்.