திருவாரூர்
249 நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடு
|திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு 249 நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு 249 நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் மூலமாக வெளியிடப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமுடன் பின்பற்றவேண்டும்.
மனித உயிர் பாதுகாப்பு, கால்நடை பாதுகாப்பு, உடமைகள் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
249 நிவாரண முகாம்கள்
துணை கலெக்டர் நிலையிலான 10 குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாருர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்க கூடிய பகுதிகளாக 209 இடங்கள் கண்டறியப்பட்டு 249 நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சமூதாய உணவு மையங்கள் அமைக்க 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மழைக்காலங்களில் வெளியில் வரும் பாம்புகளை பிடிக்க பாம்பு பிடிப்பவர்கள் தயார் நிலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்க கூடிய 209 பகுதிகளில் அமைந்துள்ள 713 கிராம அங்காடிகளுக்குறிய அத்தியாவாசிய பொருட்கள் 9,630 டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
1 லட்சத்து 803 மணல் முட்டைகள் தயார்
மாவட்டத்தில் வெள்ள உடைப்பு ஏற்பட கூடிய பகுதிகளுக்கு 1 லட்சத்து 803 மணல் முட்டைகளும், 84 ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லின் எந்திரம், நீர் இறைக்கும் எந்திரங்கள் தயாராக உள்ளன. மீன்வளத்துறை மூலம் 50 படகுகள் தயார் நிலையில் உள்ளது.
சுகாதாரத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் மழைநீர் தேங்கிய இடங்களில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் தடுக்க போதிய தடுப்பு ஊசிகள் மற்றும் பிளிச்சிங் பவுடர் ஆகியவையும், 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளும் தயார் நிலையில் உள்ளது.
கட்டுப்பாட்டு அறை
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்க கூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாங்குடி பாண்டவையாற்றின் கதவணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேற்று இரவு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொட்டும் மழையில் குடைப்பிடித்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, கூத்தாநல்லூர் தாசில்தார் சோமசுந்தரம், திருவாரூர் தாசில்தார் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.