ராமநாதபுரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள்
|ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
மீனவர்கள் மாநாடு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் பகுதியில் வருகி 18-ந் தேதி தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மீனவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்..
அதற்காக மண்டபம் கேம்ப் பகுதியில் விழா பந்தல் மற்றும் மேடை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடம் முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு பணி நடக்கிறது.
அமைச்சர்கள் ஆய்வு
இந்த நிலையில் மண்டபம் முகாம் பகுதியில் நடைபெறும் பணிகளை நேற்று தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ராஜகண்ணப்பன், மூர்த்தி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சாமுத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. அமைச்சர்களிடம் விளக்கி கூறினார். அதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
16-ந்தேதி மதுரை வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 17-ந்தேதி அன்று ராமநாதபுரம் அருகே பேராவூர் என்ற இடத்தில் கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழக முதல்-அமைச்சர் வருகின்ற 16-ந்தேதி அன்று மதுரை வருகின்றார். அன்று இரவு மதுரையில் தங்கும் அவர் 17-ந் தேதி பிற்பகல் மதுரையில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு ராமநாதபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் அன்று இரவு ராமேசுவரத்தில் தங்குகிறார்.
18-ந் தேதி காலை மண்டபம் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மீனவர்கள் வைக்கும் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார். தி.மு.க. சார்பில் எந்த மாவட்டத்தில் மாநாடு நடத்தப்பட்டாலும் அது கட்சிக்கும் ஆட்சிக்கும் நன்மை தரும் வகையில்தான் இருக்கும். அதே போல தான் மீனவர்கள் மாநாடும் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முதல்-அமைச்சர் வரவுள்ளதை தொடர்ந்து மண்டபம் முகாம் பகுதியில் விழா ஏற்பாடுகள் தீவிரமாகவே நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், கட்சியின் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் மற்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள், அமைச்சர்களிடம் விளக்கம் அளித்தனர்.