விழுப்புரம்
8¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு
|விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் 8¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடற்புழு நீக்க மாத்திரை
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி அன்று 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து(அல்பெண்டசோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. அன்று விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டு அன்று வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 1,781 அங்கன்வாடி மையங்களிலும், 1,641 பள்ளிகளிலும் படிக்கும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 6,80,747 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,65,958 பெண்களுக்கும் என மொத்தம் 8,46,705 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்
மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மில்லிகிராம் கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 மில்லிகிராம் கொண்ட மாத்திரையும் வழங்கப்படும்.
குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ரத்தசோகையை தடுக்கிறது. நோய் தடுப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. இதில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊட்டச்சத்து துறையைச்சேர்ந்த 3,357 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், பெற்றோர்களிடம் இத்தகவலை தெரிவித்து அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க நாளன்று மாத்திரையை உட்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.