ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நாளை மதுரை வருகிறது...!
|காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரைக்கு வருகிறது.
மதுரை,
காஷ்மீரில் ரஜோரி நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ வீரர்கள் ஆக்ரோஷ பதிலடி கொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இ்ந்த சம்பவத்தில் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 24) என தெரியவந்தது.
லட்சுமணனின் சொந்த ஊர் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டி ஆகும். அவருடைய பெற்றோர் தர்மராஜ்-ஆண்டாள். இந்த தம்பதியின் மூத்த மகன் ராமர். இளைய மகன்தான் லட்சுமணன். ராமர், லட்சுமணன் இரட்டையர்கள் ஆவார்கள்.
தீவிரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவத்தை நேற்று மதியம் அவருடைய குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் லட்சுமணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக ராணுவத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த லட்சுமணனின் உடல் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு நாளை கொண்டு வரப்படுகிறது. சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.