< Back
மாநில செய்திகள்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் - விண்ணப்பம் தொடங்கியது
மாநில செய்திகள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் - விண்ணப்பம் தொடங்கியது

தினத்தந்தி
|
9 Aug 2022 10:24 PM IST

'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் வேலூரில் நவம்பர் மாதம் 27-ந்தேதி நடக்கிறது.

சென்னை:

'அக்னி பாத்' திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள் சேர்ப்பு முகாம் வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வருகிற நவம்பர் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது.

அதன்படி, ராணுவ போலீஸ் பதவியில் உள்ள அக்னி வீரர் பொதுப்பணிக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுளை சேர்ந்த பெண்கள் பதிவு செய்யலாம்.

ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க விண்ணப்பம் செய்வதற்கு இன்று முதல் பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரையிலும் விண்ணப்பம் செய்வதற்கு பதிவு செய்யலாம்.

ஆன்லைன் முறையில் பதிவு செய்பவர்கள் மட்டுமே ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவார்கள். பதிவுகளின் அடிப்படையில் ஆள் சேர்ப்பு முகாமுக்கான நுழைவுச்சீட்டு நவம்பர் 1-ந்தேதி முதல் வழங்கப்படும்.

நுழைவுச்சீட்டில் முகாமில் பங்கேற்கவேண்டிய தேதி குறிப்பிடப்படும். நவம்பர் 1-ந்தேதிக்கு பின்னர் விண்ணப்பததாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் சென்று நுழைவுச்சீட்டை 'பிரிண்ட்' எடுத்துக்கொள்ளலாம்.

ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வு முழுமையாக தானியங்கி முறையில் நியாயமாகவும், வெளிப்படையாக நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறிக்கொண்டு, மோசடிகளில் ஈடுபடும் மோசடிக்காரர்களிடம் விண்ணப்பதாரர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

கடின உழைப்பு மற்றும் தயார்நிலை ஆகியவையே தகுதியின் அடிப்படையில் உங்களுடைய தேர்வினை உறுதி செய்யும். விண்ணப்பதாரர்கள் ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பான தங்களுடைய சந்தேகங்களை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்