ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
|ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பொய்யான தகவல் என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூலிப்படை கும்பல், அரசியல் கட்சி பிரமுகர்கள் என கைது நடவடிக்கை நீண்டு கொண்டே வருகிறது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்தும், சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தியும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆம்ஸ்ட்ராங் மனைவியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பொற்கொடி, திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட 1,500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையில் பேரணி நடத்திய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, 2 வயது குழந்தை உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. நீதி கேட்டு போராடுவோருக்கு நீதி வழங்காமல் வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக, தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி அனுமதியில்லாமல் பேரணி நடத்தியதாக அவரின் 2 வயது மகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் பதிவிட்டு இருக்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல். 'பேரணி தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப் பதிவு ஏதும் செய்யப்படவில்லை' என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.