< Back
மாநில செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
6 July 2024 11:34 AM IST

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப் போக்கின் காரணம்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம்.

நாளை (ஜூலை 07) பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தமிழ்நாடு வரவுள்ளார். எங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும்" என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்