ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு: தே.மு.தி.க நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை
|ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அன்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அன்று இரவேடு இரவாக கைது செய்யப்பட்டனர்.11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் 'என்கவுண்டர்' முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மற்ற 10 கொலையாளிகளும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பெண் வக்கீல் மலர்கொடி, இன்னொரு வக்கீல் ஹரிஹரன், கைதான அருளின் உறவினர் சதீஷ் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் போலீசாரால் தேடிவரப்பட்ட பெண் தாதாவான அஞ்சலை புளியந்தோப்பில் கைது செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக திருவள்ளூர் நகர தே.மு.தி.க. செயலாளர் மணிகண்டன் மற்றும் வழக்கறிஞரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.