< Back
மாநில செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை.. - சீமான் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: "தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை.." - சீமான் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
7 July 2024 2:12 PM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை... சரணடைந்துள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அஞ்சலி செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், "ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும் .

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.. சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது..?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்