< Back
மாநில செய்திகள்
ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை: குடும்ப பிரச்சனை காரணமாக விபரீத முடிவு? - போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை: குடும்ப பிரச்சனை காரணமாக விபரீத முடிவு? - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
30 Dec 2023 10:04 PM IST

நாமக்கல்லில் ஆயுதப்படை பெண் காவலர் களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்,

சேலம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (32 வயது). இவர் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஆயுதப்படை காவலராக பணியாற்றியுள்ளார். தற்போது நாமக்கல்லில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு தினமும் பணிக்கு சென்று வந்தார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவருடன் விவாகரத்தாகி இருந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த மற்றொரு காவலருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையேயும் மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வைஷ்ணவி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 28-ம் தேதி நாமக்கல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விட்டு மாலை வீட்டுக்குச் சென்ற வைஷ்ணவி, களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்