< Back
மாநில செய்திகள்
அர்ஜுன் சம்பத் திண்டுக்கல்லில் கைது - இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கண்டனம்
மாநில செய்திகள்

அர்ஜுன் சம்பத் திண்டுக்கல்லில் கைது - இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கண்டனம்

தினத்தந்தி
|
7 Sept 2022 2:43 PM IST

ராகுல் காந்தியின் பாதயாத்திரையை எதிர்த்து கோ பேக் இயக்கத்தில் பங்கேற்க ரெயிலில் சென்ற இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்:

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற‌செய்வதற்கு கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பாதயாத்திரை கன்னியாகுமரியில் இன்று (புதன்கிழமை) தொடங்கி காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. 12 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு ஒரு கோடி மக்களை சந்திக்க திட்டம் வகுத்துள்ளார்.‌

இதற்கிடையே ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்குவதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள வரும்போது கோ பேக் இயக்கம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்தார்.

மேலும் கோ பேக் இயக்கத்தில் பங்கேற்க நேற்று இரவு கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அர்ஜுன் சம்பத் கோவையில் இருந்து புறப்பட்டு வந்தார். அந்த ரெயில் நேற்று இரவு 11:30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது.

இதையடுத்து கோபேக் இயக்கத்தில் பங்கேற்காமல் தடுக்கும் வகையில் திண்டுக்கல் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அர்ஜுன் சம்பத்தை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர், கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

அதிமுக ஆட்சிக்காலத்தில் பாரதப் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிற பொழுது "மோடி கோ பேக் " நிகழ்ச்சி மற்றும் கருப்பு பலூன் விடுதல், கருப்புக்கொடி காட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளை திமுக நடத்தியது.

கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் நிகழ்ச்சிக்கு கூட இடம் ஒதுக்கி கொடுத்து பாதுகாப்பு கொடுத்தது. ஆனால் ராகுலுக்கு கருப்பு கொடி காட்டுகின்ற ஒரு ஜனநாயக நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறது. திமுகவின் காவல்துறைக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்

மேலும் செய்திகள்