அரியலூர்
பயனற்று காணப்படும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு
|திறக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு பயனற்று காணப்படுவதினால் வரிப்பணம் வீணாவதாக மக்கள் குமுறுகின்றனர்.
பாழடைந்து வருகிறது
அரியலூரில், திருச்சி சாலையில் சார்-ஆட்சியருக்கான புதிய குடியிருப்பு ரூ.79 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டு, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால், அந்தக் குடியிருப்பில் இதுவரை சார்-ஆட்சியரோ அல்லது கோட்டாட்சியரோ குடியேறவில்லை. இதனால் அந்தக் கட்டிடத்தைச் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி வருவதுடன், கட்டிடமும் பாழடைந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த குடியிருப்பு கட்டிடம் கட்டி, திறக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. இதனால், மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது பாழடைந்து வருகிறது. இதனால் இரவு, பகல் என மது பிரியர்கள் எந்த நேரமும் இங்கு மது பாட்டில்களை வாங்கி வந்து மது அருந்திவிட்டு செல்வதுடன், காலி பாட்டில்களையும் அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர்.
சட்ட விரோத செயல்கள்
மேலும் அவர்கள் வாங்கி வரும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு அங்கேயே குப்பைகளை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் ஏராளமான ஏழைகள் முறையான வீடு இன்றி தவித்து வரும் நிலையில் இதுபோன்ற செயல் எங்களுக்கு பெரிதும் வேதனையாக உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சட்ட விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. எனவே சார்-ஆட்சியருக்கான குடியிருப்புக் கட்டிடத்தை சுற்றி வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை நிரந்தரமாக அப்புறப்படுத்திவிட்டு, கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் கட்டிடத்தை சுற்றி நீச்சல் குளம் போன்று தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.