அரியலூர்
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் சாதனை
|மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
நீட் தேர்வில் சாதனை
இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்து, தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 13-ந்தேதி வெளியானது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளில் தமிழக அரசின் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான தகுதியான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன்-எழிலரசி தம்பதியின் மகள் அன்னபூரணி(வயது 18) என்பவர் 7-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்த படியே நீட் தேர்வுக்கு படித்து தேர்வு எழுதினார். அப்போது 163 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார். பிறகு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து விடா முயற்சியுடன் படித்து தமிழக அரசு அறிவித்துள்ள முதல் 10 இடங்களில் 7-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி அன்னபூரணியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், எனக்கு இளம் வயதில் இருந்தே டாக்டராகி அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர்மையாக சேவை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவாகும். அதற்காகதான் கடுமையாக விடாமுயற்சியுடன் நன்கு படித்து நீட் தேர்வில் 533 மதிப்பெண்கள் எடுத்து தமிழக அரசு அறிவித்துள்ள முதல் 10 இடங்களில் 7-வது இடத்தை பிடித்துள்ளேன் என்றார்.
எனது ஊரில் முதல் டாக்டராக...
இதேபோல் அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் 531 மதிப்பெண் பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவர் புகழேந்தி 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான முதல் 10 இடங்களில் 8-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவர் புகழேந்தி கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, ரஞ்சன்குடி எனது சொந்த ஊர். 6 முதல் 10-ம் வகுப்பு வரை ரஞ்சன்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். பிளஸ்-1, பிளஸ்-2 பெரம்பலூரில் செயல்பட்ட மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தேன். என்னுடைய பெற்றோர் என்னை கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தார்கள். தந்தை தமிழ்ச்செல்வன் கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார். தாய் சுமதி ஆடு மேய்த்து வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க தான் எனக்கு இடம் கிடைத்தது. இதனால் 2-வது முறையாக நீட் தேர்வு எழுதி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் மதிப்பெண்ணாக 531 பெற்று தேர்ச்சி பெற்று தற்போது அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்து படிக்க தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 8-வது இடத்தை பிடித்து தகுதி பெற்றுள்ளேன். விடா முயற்சியால் இந்த வெற்றியை என்னால் பெற முடிந்தது. இதற்கு எனது ஆசிரியர்கள் பக்க பலமாக இருந்தனர். எனது ஊரில் இருந்து டாக்டருக்கு படிக்க செல்லும் முதல் மாணவர் என்ற பெருமையும் பெற்றுள்ளேன், என்றார். புகழேந்தியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களான பிரவீன், துளசிராஜன், அபினேஷ் ராஜா, வசந்த், மாணவி கவிப்பிரியா ஆகிய 5 பேரும் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களான 2 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.