< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய், மனநல பிரிவுகள் மீண்டும் செயல்பட தொடங்கின

தினத்தந்தி
|
5 May 2023 12:55 AM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய், காது மூக்கு தொண்டை மற்றும் மனநல பிரிவுகள் மீண்டும் செயல்பட தொடங்கின.

அரசு மருத்துவக்கல்லூரி

அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அரசு மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்தார். இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக நேரில் வந்து திறந்து வைத்தார். அன்று முதல் வெளி நோயாளிகள் பிரிவு செயல்படும் என அறிவித்திருந்தனர். அதன்பேரில் அமைச்சர் திறந்து வைத்தபோது சிலருக்கு சிகிச்சை அளித்தனர். அன்றைய ஒரு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்படவில்லை.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றவுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பூட்டப்பட்டது. தற்போது உள்ள பழைய மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல், பிரசவ வார்டுகளிலும் போதிய இடம் இன்றி நோயாளிகள் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் கட்டமாக தோல் நோய் பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் மனநலப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் நேற்று மீண்டும் செயல்பட தொடங்கின. மேலும் அனைத்து பிரிவுகளும் படிப்படியாக செயல்பட தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 2 லிப்ட்டுகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ள லிப்ட் களை இயக்குவதற்கு அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி மற்றும் தீயணைப்பு அனுமதி ஆகியவை இன்னும் பெறப்படவில்லை. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதிகள் ஆகியவற்றிற்கு சுமார் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் குடிநீரும் வழங்கப்படவில்லை. புதை சாக்கடை திட்டமும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இது போன்ற பிரச்சினைகள் சரி செய்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். எனவே மாவட்ட மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்