அரியலூர்
அரியலூர் மாவட்ட புகார் பெட்டி செய்திகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தெக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்ததையடுத்து, அதன் அருகிலேயே புதிதாக ஒரு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தான நிலையில் உள்ள சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சமூக ஆர்வலர்கள், மீன்சுருட்டி.
தூர்வாரப்படாத வாய்க்கால்
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகரில் கிழக்கு பகுதியில் நீண்ட வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்கால் வழியாக பொதுமக்கள் வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் சுடுகாடு மற்றும் கிழக்கு தெருவிலிருந்து வரும் மழைநீர் ஆகியவை பெரிய ஏரிக்கு செல்வது வழக்கம். பல மாதங்களாக இந்த வாய்க்காலில் புற்கள் அதிகளவில் முளைத்து கழிவுநீர் எங்கும் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் நிற்பதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வாய்க்காலை தூர்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முனியங்குறிச்சி.
வேகமாக செல்லும் லாரிகள்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் கீழே தினமும் எண்ணற்ற பஸ்கள், கனரக வாகனங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கைகாட்டியிலுள்ள தனியார் சிமெண்டு ஆலைக்கும், மு.புத்தூர் கிராமத்தில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்திற்கும் அதிக அளவில் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், சிமெண்டு மூட்டைகள் ஏற்றி செல்லும் லாரிகள் மேம்பாலம் அருகே 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இவைகளை டிப்பர் லாரிகள் துளியளவும் மதிக்காமல் மின்னல் வேகத்தில் செல்வதால் இப்பகுதி வழியாக செல்லும் பஸ்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி.