அரியலூர்
இலவச பயண அட்டை இருந்தும் டிக்கெட் எடுக்க வற்புறுத்தல்: கல்லூரி மாணவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
|இலவச பயண அட்டை இருந்தும் டிக்கெட் எடுக்க வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
இலவச பயண அட்டை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கீழவெளி வல்லபட்டி குப்பத்தை சேர்ந்தவர் உத்தமராசு(வயது 45). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அசோக்ராஜ்(20). இவர் சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு அரசு பஸ்களில் ஆண்டுதோறும் 5,500 கிலோமீட்டர் வரை இலவசமாக பயணம் செய்யும் வகையில் பயண அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை செல்வதற்காக அசோக்ராஜ் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பஸ் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்த கண்டக்டரிடம் இலவச பயண அட்டையை அசோக்ராஜ் காட்டினார்.
ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு
ஆனால் அந்த பஸ்சில் இருந்த கண்டக்டரோ, இது சிறப்பு பஸ். இந்த பஸ்சில் பயண அட்டை செல்லுபடியாகாது. எனவே டிக்கெட் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அப்போது அசோக்ராஜிடம் பணம் குறைவாக இருந்ததால் அருகே இருந்தவர்களிடம் கடன் வாங்கி ரூ.300-க்கான டிக்கெட்டை அசோக்ராஜ் பெற்றுக்கொண்டார். பின்னர் இதுகுறித்து தனது தந்தையிடம் அசோக்ராஜ் தெரிவித்தார். இதையறிந்த உத்தமராசு இதுபற்றி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார். மேலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய குழு தீர்ப்பு வழங்கியது. அதில், கல்லூரி மாணவர் அசோக்ராஜுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இதனை பணியில் இருந்த கண்டக்டர், ஜெயங்கொண்டம் பணிமனை மேலாளர் மற்றும் பொதுமேலாளர் ஆகியோர் வழங்க ேவண்டும் என்றும், கல்லூரி மாணவரிடம் பணம் வசூலித்த கண்டக்டர் டிக்கெட் கட்டணம் ரூ.300-ஐ திரும்ப வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.