திருச்சி
அரிஸ்டோ மேம்பால கட்டுமான பணிகள் தீவிரம்
|அரிஸ்டோ மேம்பால கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்தநிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் கொடுக்க தாமதம் ஏற்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி நிறைவடையாமல் கிடப்பில் இருந்தது.
அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியில் மட்டுமே கடந்த 2018-ம் ஆண்டே பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப்பணிகளுக்கான இடத்தினை கொடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தற்போது பணிகள் தொடங்கியது. இதில், முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் இருந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. பின்பு ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை சுற்றி தடுப்பு சுவர் எழுப்பட்டது. பின்னர் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பாலப்பணிகள் முழுமைஅடையும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.