< Back
மாநில செய்திகள்
ஊத்து மலை கிராம தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன்
மாநில செய்திகள்

ஊத்து மலை கிராம தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன்

தினத்தந்தி
|
19 Sept 2023 4:30 PM IST

களக்காடு வனக்கோட்டங்களை சேர்ந்த பகுதிகளில் அரிக்கொம்பனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

மாஞ்சோலை,

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வாழைகளை சாய்த்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. அவற்றுடன் 'அரிக்கொம்பன்' யானையும் சேர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த அரிக்கொம்பன் யானையை தேனி மாவட்ட வனத்துறையினர் பிடித்தனர்

பின்னர் அதனை அங்குள்ள வனப்பகுதியில் விட்டால் மீண்டும் ஊருக்குள் வந்து விடும் என்ற அச்சத்தில், அதனை லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் விட்டனர். அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இந்த நிலையில் மாஞ்சோலை அருகே நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 4 யானைகள் கூட்டமாக புகுந்தன. அங்கு தொழிலாளர்கள், வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள ரேஷன் கடை அருகில் உள்ள வாழை மரங்களையும் சாய்த்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது காட்டு யானைகளுடன் அரிக்கொம்பன் யானையும் சேர்ந்து வந்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஊத்து மலை கிராம தேயிலை தோட்டத்தில் அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, அம்பாசமுத்திரம், களக்காடு வனக்கோட்டங்களை சேர்ந்த பகுதிகளில் அரிக்கொம்பனை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடார் கருவி இணைப்பு கிடைக்காததால் 80க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்