'அரிக்கொம்பன்' யானை கன்னியாகுமரிக்குள் நுழைய வாய்ப்பு? - மக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறை தகவல்
|‘அரிக்கொம்பன்’ யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கேரள வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் யானை விடப்பட்டது.
ஆனால் அரிக்கொம்பன் யானையானது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தமிழகத்தின் வண்ணாத்திப்பாறை வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வந்தது. கடந்த மாதம் 26-ந் தேதி நள்ளிரவில் குமுளி பகுதியில் மக்கள் நிறைந்த பகுதிக்கு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கம்பம் நகருக்குள்ளும் அரிக்கொம்பன் யானை வலம் வரத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ஒரு வார போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானையை பிடித்தனர். அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 'அரிக்கொம்பன்' யானை அப்பர் கோதையாறில் முத்துக்குழிவயல் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
முத்துக்குழிவயலில் பெரும்பாலான பகுதி குமரி வனப்பகுதியை சேர்ந்தது. எனவே, அந்த பகுதியில் விடப்பட்ட யானை குமரி வனப்பகுதிக்குள் வந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 'அரிக்கொம்பன்' யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் யானையின் கழுத்தில் கருவி ஒன்று பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அந்த கருவி யானையின் இருப்பிடத்தை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தெரிவித்துக் கொண்டே இருக்கும் என்பதால், யானை மக்கள் வசிக்கும் இடத்துக்கு வருவது தெரிந்தால் முன்கூட்டியே தகவல் கிடைத்து விடும் என்று அவர் கூறினார்.