அரிக்கொம்பன் யானை வழக்கு: சிறப்பு அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
|அரிக்கொம்பன் யானை தொடர்பாக வழக்கினை சிறப்பு அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது.
இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு பலரது வீடு மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் பகுதி முழுவதும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனிடையே அரிக் கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாகப் போக்கு காட்டி வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க மருந்து செலுத்தி நேற்று பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றிச்சென்ற வனத்துறை அதிகாரிகள் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விட உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மணிமுத்தாறு வன சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல கோதையாறு அணையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதிக்கு அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ஏற்ற சாத்திய கூறுகள் இல்லாததால் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அதிகாலை வனப்பகுதியில் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே தேனியைச் சேர்ந்த கோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேரள வனத்துறைக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அரிக்கொம்பன் யானையினால் தமிழ்நாட்டிலுள்ள கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பொருட்கள் சேதம் அடைந்தன. எனவே, தேனி வன அலுவலர் குழு ஒன்றை ஏற்படுத்தி அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்தை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கவும், அரிக்கொம்பன் யானையை பிடித்து கேரள அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்.
மீண்டும் அரிக்கொம்பன் யானை தமிழ்நாட்டிற்கு வர விடாத வண்ணம் கேரள அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கேரள அரசு இதனை ஏற்க மறுக்கும்பட்சத்தில் வனவிலங்கு சட்டத்தின்படி மனித உயிர் மற்றும் பொருட்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் அரிக்கொம்பன் யானையை வேட்டையாட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அரிக்கொம்பன் யானையை களக்காடு-முண்டந்துறை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரும் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள், தமிழக அரசு பல லட்சம் செலவு செய்து இந்த யானையை பிடித்துள்ளது. சில விசயங்களில் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் இந்த விசயத்தில் நிபுணர்கள் இல்லை. ஆகவே இந்த வழக்கு தொடர்பாக மனுவை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றுகிறோம் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.