'அரிக்கொம்பன்' யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு..!
|கம்பம் அருகே அரிக்கொம்பன் யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழந்தார்.
தேனி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 'அரிக்கொம்பன்' என்ற காட்டு யானை வலம் வந்தது. இந்த யானை அங்கு ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளை நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதையடுத்து கேரள வனத்துறையினர் அந்த யானையை கடந்த 29-ந்தேதி மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதக்கானம் வனப்பகுதியில் விட்டனர். மேலும் அந்த யானையின் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்ைத கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி காலை 'அரிக்கொம்பன்' காட்டு யானை கம்பம் நகருக்குள் திடீரென்று புகுந்தது. அப்போது அந்த யானை வீதி, வீதியாக ஓடியது. அரிக்கொம்பன் யானை ஊருக்குள் புகுந்ததால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நீலகிரி மாவட்டம் டாப்சிலிப், ஆனைமலை ஆகிய பகுதிகளில் இருந்து அரிசி ராஜா என்ற முத்து, சுயம்பு, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அந்த 3 யானைகள் கம்பத்தில் கட்டிப்போடப்பட்டு, தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
ஊர், ஊராக இடம்பெயர்ந்து அரிக்கொம்பன் யானை போக்கு காட்டி வருகிறது. அந்த யானையை பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கம்பம் அருகே அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைபெற்று வந்த பால்ராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கடந்த 27-ம் தேதி கம்பம் நகர் பகுதிக்குள் நுழைந்த யானை பால்ராஜை தாக்கியது குறிப்பிடத்தக்கது.